SELANGOR

கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 4 இந்தியர்கள் உள்பட 17 பேர் பதவியேற்பு

பந்திங், ஜன 19- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்வு   நேற்று இங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மொத்தம் 17 பேர்  நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான்  முன்னிலையில் பதவி உறுதிமொழி மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களில்  நால்வர் இந்தியர்களாவர்.

மொத்தம் 24 உறுப்பினர்கள் கொண்ட நகராண்மைக் கழகத்தில் நேற்று 17 பேர் மட்டுமே பதவியேற்றனர். அம்னோ மற்றும் அமானா கட்சிகளைச் சேரந்த எஞ்சிய பிரதிநிதிகள் பின்னர் பதவியேற்பர்.

இந்த பதவியேற்பு நிகழ்வில்  மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இந்தியர்களை பிரதிநிதித்து பன்னீர் செல்வம் குப்பன் , நடேசன் சுப்பிரமணியம், கமலநாதன் செல்லப்பன் மற்றும் திருமதி உஷாநந்தினி ஞானப்பிரகாசம் ஆகியோர் நகராண்மைக் கழகத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தில் கடந்த தவணையின் போது ஐந்து பேராக இருந்த இந்தியப்  பிரதிநிதிகளின் எண்ணிக்கை இம்முறை நான்காக குறைந்துள்ளது.

இந்த தவணையில் அம்னோவுக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்ட காரணத்தால் ஒரு இடம்  குறைந்துள்ளது அதே வேளையில் முன்னாள் நகராண்மை கழக உறுப்பினரான  ஹரிதாஸ் ராமசாமி  கோல லங்காட் தொகுதி ஒருங்கிணைப்பாளராக பதவியேற்க  விரும்புவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இங்கு நீடித்து வரும் மின்சுடலை மற்றும் ஈமச்சடங்கு செய்யும் இடம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு  புதிதாக நியமனம் பெற்ற நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் வாயிலாக தீர்வு காணப்படும் என்றார்.


Pengarang :