SELANGOR

பொது வசதி பராமரிப்புக்கு எம்பிஏஜே RM45 மில்லியன் ஒதுக்கீடு

அம்பாங் ஜெயா, ஜன 19: இந்த ஆண்டு பொது வசதிகள் பராமரிப்பதற்காகச் சுமார் RM45 மில்லியன் ஒதுக்குவதாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) தெரிவித்தது.

அந்த ஒதுக்கீடு மாநில அரசு உட்பட பல தொடர்புடைய அமைச்சகங்களின் நிதி மற்றும் எம்பிஏ ஜே வருவாயில் இருந்து பெறப்பட்டது என அதன் தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

“இந்த நிதி அம்பாங் ஜெயா வில் உள்ள மலை சரிவுகள், கழிப்பறைகள், வடிகால் மற்றும் கியோஸ்க்குகள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

“2023 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஒதுக்கீட்டின் மதிப்பு RM23 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும், அம்பாங் ஜெயாவில் மக்களின் வசதிக்காக நிறைய உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவியேற்பு க்குப் பின்னர், எம்.பி.ஏ.ஜே. கட்டிடத்தில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹைலேண்ட் டவர்ஸ் நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 356 மலை சரிவுகளை கண்காணிக்கும் பொறுப்பையும் எம்பிஏஜே  ஏற்றுள்ளதாக தெரிவித்தது.

எம்பிஏஜே 61 உயர் மற்றும் நடுத்தர ஆபத்து கொண்ட மலை சரிவுகளைக் கண்காணித்து ஆரம்பக்கட்ட மேலாண்மை பணிகளை 2023ஆம் ஆண்டு முழுவதும் மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :