NATIONAL

5எஸ் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மலேசியா சாதனை

கோலாலம்பூர், பிப் 1- முதன் முறையாக நடத்தப்பட்ட 5எஸ் உலகக்
கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா நெதர்லாந்திடம் 2-5 என்ற கோல்
கணக்கில் தோல்வி கண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் நாட்டின்
ஹாக்கி விளையாட்டு வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாகக்
கருதப்படுகிறது.

ஓமன் நாட்டின் மஸ்காட்டில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் வெற்றியை
ஈடுவதற்கு மலேசிய அணியினர் கடுமையாகப் போராடிய போதிலும்
ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்தை அவர்களால் வெல்ல
முடியவில்லை என்று ஐவர் ஹாக்கி அணியின் 5எஸ் தலைமைப்
பயிற்றுநர் வேலஸ் டான் கூறினார்.

மலேசிய ஹாக்கி அணியைப் பொறுத்த வரை உலக அளவில் இது
சிறப்பான மற்றும் உயரிய வெற்றியாகும். எங்கள் குழுவுக்கு வற்றாத
ஆதரவை வழங்கிய அனைத்து மலேசியர்களுக்கும் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் வாயிலாக ஊடகங்களுக்கு வெளியிட்ட
காணொளி ஒன்றில் அவர் இவ்வறு குறிப்பிட்டார்.

ஓமன் நாட்டில் வெற்றியாளர் கிண்ணத்தை கைப்பற்றுவதில் மலேசிய
குழு தோல்வி கண்ட போதிலும் தேசிய ஹாக்கி அணிக்கு மலேசிய
ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவார்கள் எனத் தாம் நம்புவதாக
அவர் மேலும் சொன்னார்.

இந்த போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த மலேசிய ஹாக்கி அணி
தொடக்க ஆட்டத்தில் ஓமன் நாட்டிடம் 3-3 என்ற கோல் கணக்கில்
சமநிலை கண்டது. பின்னர் அமெரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கிலும்
பீஜியை 8-3 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி
பெற்றது.


Pengarang :