NATIONAL

சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க துறை நடத்திய சோதனையில் 40.37 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

ஷா ஆலம், பிப் 1: கடந்த செவ்வாய், மீனவர் படகுத்துறை (ஜெட்டி) சிகிஞ்சான், சபாக் பெர்ணமில் சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க துறை நடத்திய சோதனையில் இந்தோனேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 40.37 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சிலாங்கூர் கடற்பகுதியில் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்து , கே.எம்.பாகான் டத்தோ வின் புலனாய்வுப் பிரிவு மற்றும் தேடுதல் குழு இரவு 8.30 மணியளவில் ஒரு மீன்பிடி படகை ஆய்வு செய்ததாகச் சிலாங்கூர் கடல்சார் இயக்குனர் கேப்டன் அப்துல் முஹைமின் முகமட் சலே கூறினார்.

சோதனையின் போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் தண்ணீரில் குதித்து தப்பித்து விட்டனர். அதே நேரத்தில் 44 வயதான இந்தோனேசிய நபர் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதற்காக கைது செய்யப்பட்டார்.

“படகில் மீன் சேமிப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்கு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு சாக்குகளில் 38 சீன தேயிலை பேக்கட்டுகள் இருந்தன. அவை கடத்தப்பட்டதாக நம்பப்படும் சியாபு வகை போதை பொருளாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

மேல் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டவர், படகு மற்றும் போதைப்பொருட்கள் சிலாங்கூர் கடல்சார் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்க பட்டதாகவும் அப்துல் முஹைமின் கூறினார்.

இந்த வகைபோதைப்பொருள் பிடிப்பு மிகப்பெரியது என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :