ECONOMYNATIONAL

அரசாங்க உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடாமலிருக்க தரவுத் தளத்தில் விரைந்து பதிவு செய்வீர்

ஷா ஆலம், மார்ச் 19– அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட மானியம் அல்லது
உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடாமலிருக்க “பாடு“ எனப்படும்
முதன்மை தரவுத் தள முறையில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி
18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாகக் குடும்பத் தலைவர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்குகின்ற உதவிகள் சரியான தரப்பினரைச்
சென்று சேர்வதை உறுதி செய்வதில் இந்த குடும்ப விபர புதுப்பிப்பு
அவசியமாவதாக சிலாங்கூர் மாநில புள்ளி விபரத் துறையின் இயக்குநர்
ஹரித்தினி யாக்கோப் கூறினார்.

அரசாங்கத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த தரவுத் தளத்தில் நேற்று வரை
சிலாங்கூரில் மிக அதிகமாக   பதிவு செய்துள்ளனர். என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் உள்ள 72 லட்சம் மக்கள் தொகையில் 48 லட்சம் பேர் 18
வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். இறுதி நேரம் வரை காத்திராமல்
இந்த தளத்தில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்
கொள்கிறோம் என்றார் அவர்.

இந்த பதிவு நடவடிக்கை இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம்
தேதி வரை நடைபெறுகிறது. பொது மக்கள் என்ற அகப்பக்கம் வாயிலாக
இந்த பதிவினை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த தளம் உயரிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறிய
அவர், 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பதிவு நடவடிக்கையை
மேற்கொள்ள முடியும் என்றார்.

பொது மக்கள் வழங்கும் விபரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளி
ஆலோசகர்களின் உதவியின்றி பொருளாதார அமைச்ச, மலேசிய
புள்ளிவிபரத் துறை, மலேசிய நிர்வாக நவீனமய மற்றும் திட்டமிடல்
மேலாண்மை இலாகா ஆகியவை இந்த தளத்தை உருவாக்கியுள்ளன.


Pengarang :