NATIONAL

சுபாங் ஜெயா பேரங்காடியில் இணைய சூதாட்ட மையம் நடத்தியதாக 61 பேர் மீது குற்றச்சாட்டு 

ஷா ஆலம், மார்ச் 26 – சுபாங் ஜெயாவிலுள்ள பேரங்காடி ஒன்றில் இணைய சூதாட்ட மையத்தை நிர்வகிப்பதில் உதவியதாக 61 உள்நாட்டினர் மீது பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ் சாட்டப் பட்டது.

மாஜிஸ்திரேட் முகமது ரெஸா அஸார், மாஜிஸ்திரேட் முகமது ஷியாபிக் சுலைமான், மாஜிஸ்திரேட் ஃபாரா ரோஸ்னான் மற்றும் மாஜிஸ்திரேட் சஷா டியானா சப்து ஆகியோர் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட இக் குற்றச்சாட்டை 20 முதல் 40 வயது வரையிலான  அந்த 61 பேரும் மறுத்து விசாரணை கோரினர்.

சட்டவிரோத இணைய சூதாட்ட மையத்தை நடத்துவதில் உதவியதாக 58 பேர் மீதும், சுபாங் ஜெயாவிலுள்ள ஸ்கை பார்க் ஓன் சிட்டியில் உள்ள அந்த இடத்தை சூதாட்ட மையத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் உதவியதாக இதர மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 18ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் சுபாங் ஜெயா, ஸ்கை பார்க், ஓன் சிட்டியில் இக் குற்றத்தைப் புரிந்ததாக அம்மூவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் 1953ஆம் ஆண்டு பொது சூதாட்ட நிலையச் சட்டத்தின் 4(1)(சி) பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசுத் தரப்பில் துணை  பப்ளிக் புரோசிகியூட்டர்களான நுருள் ஃபாரா, சோபியா நோராஸ்மான், கமாருள் இமான் அகமது சாபியா, சைடா ஃபாஷியா சே யூசுப் மற்றும் அனுர் அதிரா அம்ரான் ஆகியோர் வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் நவின் புஞ்ச், டினேஷ் குமார், பிரேம்ஜிட் சிங் கில், நியு சின் இயோ ஆகியோர் ஆஜராகின்றனர்.


Pengarang :