MEDIA STATEMENTNATIONAL

ஹெலிகாப்டர் விபத்து- கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் 21 முக்குளிப்பாளர்கள்

கோலாலம்பூர், மார்ச் 28- கோலக் கிள்ளான் கடல் பகுதியின் பூலாவ் அங்காசா அருகே கடந்த மார்ச் 5ஆம் தேதி அவசரத் தரையிறக்கம் கண்ட மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்கு (ஏ.பி.எம்.எம்.) சொந்தமான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை கண்டு பிடிப்பதற்கான இரண்டாம் கட்ட தேடுதல் பணியில் அந்த அமலாக்க நிறுவனத்தின் 21 முக்குளிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிங்கர் சமிக்ஞையை அடிப்படையாகக் கொண்டு 50 முதல் 100 சதுரமீட்டர் பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படுவதாக ஏ.பி.எம்.எம். தலைமை இயக்குநர் லக்ஸ்மணா மெரிடைம் டத்தோ ஹமிட் முகமது அமின் கூறினார்.

இந்த கருப்புப் பெட்டி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கிய இடத்திலிருந்து 700 முதல் 800 மீட்டர் சுற்றளவில் இருக்கக் கூடும் என்பதை தேசிய ஹைட்ரோகிராபி மையம் மற்றும் அரச மலேசிய கடற்படையின் தகவல்கள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கடலுக்கடியில் காணப்படும் வேகமான நீரோட்டம் மற்றும்  சகதி காரணமாக கடலுக்கடியில் பார்க்கும் தொலைவு குறைவாக இருப்பது ஆகியவை கருப்புப் பெட்டியைத் தேடும் பணியை சிரமமானதாக ஆக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த கருப்புப் பெட்டி இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை விரைவில் கண்டு பிடிப்பதற்கான சாத்தியம் உள்ளது என தாங்கள் பெரிதும் நம்புவதாக அவர் அறிக்கை ஒன்றில்  தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியைக் கண்டு பிடிக்கும் முதல் கட்ட நடவடிக்கை கடந்த மார்ச் 6 முதல் 24 வரை விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :