MEDIA STATEMENTNATIONAL

கார்- லோரி மோதல்- தாய், மூன்று மாதக் குழந்தை பரிதாப மரணம்

கோத்தா திங்கி, ஏப் 13-   கார் மற்றும்  டேங்கர் லோரி சம்பந்தப்பட்ட சாலை  விபத்தில்  தாயும் அவரது மூன்று மாத பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஜாலான் தஞ்சோங் பாலாவ்-பண்டார் பெனாவார் சாலையின் தாமான் ஸ்ரீ பெனாவார் அருகே  நேற்று நிகழ்ந்தது.

நேற்று மதியம் 1.38 மணியளவில்  இந்த சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு  தங்களுக்கு வந்ததாக  பண்டார் பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி  அஸ்லான் மாட் சானி கூறினார்.

இதனைத் தொடர்ந்து  எட்டு உறுப்பினர்கள்  அடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வாகனத்தில் விரைந்தனர் என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது தீயணைப்பு வீரர்கள்   இரண்டு வாகனங்கள் அதாவது ஒரு பெரோடுவா மைவி கார் மற்றும் ஒரு டேங்கர் லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளதைக் கண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மைவி காரின் பயணிகளான சம்பந்தப்பட்ட தாயும் அவரின் குழந்தையும் காரின் முன்பக்க பயணிகளின் இருக்கையில் சிக்கியிருந்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்டனர். அவ்விருவரையும் பரிசோதித்த சம்பவ இடத்திலிருந்த சுகாதார அமைச்சின்  அதிகாரிகள் அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் நஜ்வா நூர்ஷாஹிரா கமருஜாமான் (வயது 28) மற்றும் அவரது  மூன்று மாதப் பெண் குழந்தையான  ஃபெல்கா நூர்னதீரா முகமது ஃபாஹ்மி என அடையாளம் காணப்பட்டது என அவர் கூறினார்.

அந்த மைவி காரின் ஓட்டுநரான முகமது ஃபாஹ்மி அலி (வயது 30) மற்றும் இரு பிள்ளைகள் சிகிச்சைக்காக பண்டார் பெனாவார் சுகாதார மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.

அதே வேளையில்  34 வயதான  லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், இந்த மீட்பு நடவடிக்கை பிற்பகல் 2.46
மணிக்கு முடிவுக்கு வந்தது என்றார்.


Pengarang :