ECONOMYPBTSELANGOR

ரமலான் சந்தைகளை கண்காணிக்க 200 அமலாக்க அதிகாரிகள்- ஷா ஆலம் மாநகர் மன்றம் நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 21– ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய ஷா ஆலம் மாநகர் மன்றம்  சந்தைகள் நடைபெறும் 51 இடங்களில் 200 அமலாக்க அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது.

மாநகர் மன்றத்தின் லைசென்ஸ், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு  துறைகளின் அமலாக்க அதிகாரிகளோடு ரேலா பிரிவினரும் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

சந்தைகளுக்கு 12 வயதுக்கும் குறைவான சிறார்களை அழைத்து வரக்கூடாது என்பது உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை  வாடிக்கையாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

மாநகர் மன்றம் வழங்கிய அனைத்து வாய்ப்புகளையும் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரமலான் சந்தைகள் சீராக செயல்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் முழுமையான பங்கினை ஆற்றுவோம் என்றார் அவர்.

தனியார்  நடத்தி வரும் 21 ரமலான் சந்தைகள் உள்பட அனைத்து சந்தைகளிலும் இடத்தின் பரப்பளவுக்கேற்ப வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஒரு கடையில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க விரும்புகிறோம். இதன் வழி 100 கடைகள் கொண்ட சந்தையில் ஒரு சமயத்தில் 300 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.


Pengarang :