ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நில மேம்பாட்டு வைப்புத் தொகை 50 விழுக்காடு குறைப்பு- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், டிச 6- அடுத்தாண்டு தொடங்கி மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு நில மேம்பாட்டுக்கான வைப்புத் தொகை 50 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது.

தற்போது 150 விழுக்காடாக இருக்கும் நில மேம்பாட்டு வைப்புத் தொகை முதலீட்டாளர்களுக்கு சுமையளிக்கும் வகையில் உள்ளதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்பு முதலீட்டாளர்களுக்கு சுமையளிக்கும் வகையில் இருந்த கொள்கைகளில் வைப்புத் தொகையும் அடங்கும். சிலாங்கூரிலுள்ள நிலங்களுக்கான விதிமுறைகளுடன் ஒப்பிடுக்கையில் 150 விழுக்காட்டுத் தொகையை அவர்கள் செலுத்த வேண்டியதாக இருந்தது என்று அவர் சொன்னார்.

2022 ஆம் ஆண்டிற்கு இந்த வைப்புத் தொகையை 100 விழுக்காடாக குறைத்துள்ளோம். முதலீட்டாளர்களின் சுமையைக் குறைப்பதற்கும் அவர்கள் உடனடியாக முதலீடு செய்வதற்கும் ஏதுவாக சொத்துடைமை சேவை மற்றும் மதிப்பீட்டு இலாகா வழங்கிய மதிப்பீட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

100 நாட்களில் அங்கீகாரம் வழங்கும் திட்டத்தில் நிபந்தனை தளர்வுகள் ஏதும் வழங்கப்படுகிறதா? என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்தாண்டு ஜனவரி முதல் அமலில் உள்ள 100 நாட்களில் அங்கீகாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 21 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை மாநில அரசு ஈர்த்துள்ளதாக மந்திரி புசார் கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :