Anggota penguat kuasa MDHS memeriksa sisa berbuih di dalam longkang disyaki dibuang kilang membuat sarung tangan di
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது

ஷா ஆலம், நவ 5- தூய்மைக்கேட்டுக்கு காரணமாக விளங்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது.

அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கான விதிமுறைத் திட்டத்தில் பங்கேற்கவும் சம்பந்தப்பட்டத் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படாது என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சுற்றுச் சூழலுக்கும் பொது மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிற்சாலைகள் விவகாரத்தில் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்பதை தாம் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

சுமார் 200 சட்டவிரோத பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டதை இதற்கு உதாரணமாக கூறலாம். ஊராட்சி மன்றங்களின் உதவியோடு அத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு நீர் மற்றும் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது என்றார் அவர்.

இத்தகைய தொழிற்சாலைகள்தான் உண்மையில் சட்டவிரோதமானவை. இவற்றுக்கு நாம் எந்த உதவியும் செய்ய முடியாது என்பதோடு அவற்றை மூடித்தான் ஆக வேண்டும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் தற்போது 5,589 தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் வேளையில் அவற்றில் 869 தொழிற்சாலைகள் ஆற்றோரங்களில் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அந்த தொழிற்சாலைகளை சட்டவிரோதமானவை எனக் கூற முடியாது. அவை தற்காலிக வர்த்தக லைசென்சை கொண்டுள்ளன. எனினும் நில அந்தஸ்து, திட்டமிடல் உள்ளிட்ட நுட்ப நிபந்தனைகளை நிறைவு செய்யவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

அனைத்து தொழிற்சாலைகளும் மாசுபாட்டை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் மாசுபாடு ஏற்படுவதற்கு தொழிற்சாலைகள் மட்டுமே காரணமாகவும் விளங்கவில்லை. பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில் இப்பிரச்னைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது என்றார் அவர்.

அனைவரையும் விரட்டியடித்து தொழிற்சாலைகளை உடைத்தெறிவதன் மூலம் பிரச்னைகளை எளிதாக தீர்த்து விடலாம். இது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது. ஆகவே எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :