NATIONALUncategorized @ta

வீடுகளை மற்றவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு விடுவதும் தவறு! பிபிஆர் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

புத்ராஜெயா, மார்ச் 12-

மக்கள் வீடமைப்பு திட்ட (பிபிஆர்) குடியிருப்பாளர்களில் சிலர் தங்கள் வீடுகளை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுவதாக பொது மக்களிடம் இருந்து புகார்களைப் பெற்றிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு தெரிவித்தது.

தங்கள் குடியிருப்புகளை பிறருக்கு வாடகைக்கு குடி வைக்கவோ அல்லது வீட்டின் உரிமையை மாற்றவோ அனுமதி இல்லை என்று பிபிஆர் வாடகை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட குடியிருப்பை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிறருக்கு வாடகைக்கு விடவும் அனுமதி இல்லை என்றும் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா ஜுரைடா கமாருடின் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறும் தரப்பினருக்கு உடன்படிக்கையை ரத்து செய்யும் நோட்டீசை மாநில அரசாங்கம் அல்லது ஊராட்சி துறை அனுப்பும் என்றார் அவர்.

பிபிஆர் குடியிருப்பு விற்பனை உடன்படிக்கையில் அந்த வீட்டில் பிறரை குடி அமர்த்தவோ அல்லது பிறருக்கு விற்கவும் அனுமதில்லை என்ற நிபந்தனை குறிப்பிடப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு எதிராக 1960ஆம் ஆண்டு ஒப்புதல் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

பிபிஆர் குடியிருப்பு வாடகை அல்லது விற்பனை விதிகளை மீறியவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறியவர்களைன் பெயர்கள் பொது அறிவிப்பு மூலமாகவும் வீடுகள் விற்பனை/ கொள்முதல் விளம்பர அகப்பக்கங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வாயிலாகவோ வெளியிடப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

பிபிஆர் குடியிருப்புகள் வாடகை மற்றும் விற்பனை குறித்த உண்மையான தகவல்களை பொது மக்கள் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சின் அகப்பக்கத்தில் அல்லது http://ehome.kpkt.gov.my எனும் அகப்பக்கம் வழியும் பெறலாம் என்றார் அவர்.


Pengarang :