PBTSELANGOR

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிவிப்பு

ஷா ஆலம், செப் 29- ஷா ஆலம் மாநகர் மன்றம் தனது இருபதாம் ஆண்டு நிறைவுயொட்டி சம்மன் எனப்படும்  குற்றப்பதிவுகளுக்கான அபாராதத் தொகையில் ஐம்பது விழுக்காட்டு கழிவை வழங்கவிருக்கிறது.

இந்த சலுகை வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.

1983ஆம் ஆண்டு முடி திருத்தும் நிலையத் துணைச் சட்டம், 2005ஆம் ஆண்டு பூங்கா துணைச் சட்டம், 2005ஆம் ஆண்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் துணைச் சட்டம், உணவுத் தயாரிப்புத் துணைச் சட்டம், உணவு கையாளும் துணைச் சட்டம், விளம்பர துணைச் சட்டம், அங்காடி வியாபார துணைச் சட்டம், 2007ஆம் ஆண்டின் சந்தை மற்றும் சாலை போக்குவரத்து துணைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கு இந்த அபராதக் கழிவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அபராதத் தொகையை இன்னும் செலுத்தாதவர்கள் விரைந்து செலுத்துவதற்கு ஏதுவாக இந்த சலுகையை தாங்கள் அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கை மற்றும் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு  முன்னர் இந்த அபராதத் தொகைக்கான சலுகை வாய்ப்பை ஷா ஆலம் நகரவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. தலைமையகத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

குற்றப்பதிவுகளை கொண்டிருப்போர் ஷா ஆலம், செக்சன் 14 இல் உள்ள மாநகர் மன்றத் தலைமையகத்திலும் மற்றும் சுங்கை பூலோ, கோத்தா கெமுனிங், செத்தியா ஆலமிலுள்ள கிளை அலுவலங்களிலும் அபராதத் தொகையைச் செலுத்தலாம் என்றார் அவர்.

போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களை கொண்டிருப்போர் மேபேங்க்டுயு மின்னியல் முறையிலும் பேங்க் முவாலமாட் மற்றும் பேங்க் ராக்யாட் முகப்பிடங்களிலும் அபராதம் செலுத்த முடியும்.

 

 

 


Pengarang :