NATIONAL

கடனைத் திரும்பச் செலுத்தும் விவகாரம் 5 லட்சம் பேர் உதவி கோரி வங்கிகளிடம் விண்ணப்பம்

கோலாலம்பூர், செப் 30-  கடனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பில் உதவி கோரி ஐந்து லட்சம் பேர் வங்கித் துறையிடம் விண்ணப்பம் செய்ததாக பேங்க் நெகாரா மலேசியா கூறியது. அவற்றில் 98 விழுக்காட்டு விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.

மோரடோரியம்  எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை சட்டப்பூர்வமாக ஒத்தி வைப்பதற்கான அனுமதி இன்று செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் உதவி பெறுவதற்காக பேங்க் நெகாராவை இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர்  தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக அணுகியதாக அறிக்கை ஒன்றில் அந்த மத்திய வங்கி கூறியது.

இன்னும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து கருத்துரைத்த பேங்க் நெகாரா, அந்த விண்ணப்பங்களின் நிலை குறித்து வாடிக்கையாளர்களுக்கு விரைந்து அறிவிக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இவ்விவகாரத்தில் வங்கிகளின் செயல்பாட்டை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். வங்கிகளுடன் பேச்சு நடத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர் என்ற [email protected]  இணையத்தளம் வாயிலாக BNMTELELINK இணைப்பில் எங்களை அணுகலாம் என்றது.

ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் கடனைத் திரும்பச் செலுத்த ஆரம்பித்துள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடன் மற்றும் கடனுக்கான செலவினங்களைப் பெரிதும் குறைக்கும் என்பதால் கடனைத் திரும்பச் செலுத்த தொடங்கியவர்கள் அந்நடவடிக்கையை இடையூறு இன்றி தொடர்ந்து மேற்கொண்டு வருமாறு பேங்க் நெகாரா ஆலோசனை கூறியது.

 

 

 

 


Pengarang :