ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீரை மாசுபடுத்துவோருக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

ஷா ஆலம், நவ10- நீரை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனையை வழங்க வகை செய்யும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத்தின் 2020ஆம் ஆண்டிற்கான திருத்த மசோதா மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத் திருத்த மசோதாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வெள்ளியன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். விவாதத்திற்குப் பின்னர்  நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய கூட்டணி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த மாசோதா நிறைவேற்றப்பட்டது.

நீரை மாசுபடுத்தும் குற்றங்களைப் புரிவோருக்கு முன்பு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் வெள்ளி அபராத தொகையை இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வெள்ளி வரை உயர்த்தவும் கட்டாயச் சிறைத் தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டத் திருத்தத்தின் வழி நீரை சுத்தப்படுத்துவதற்கு உண்டாகும் செலவை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து கோரவும் இழப்பீடு பெறவும் முடியும்.

லுவாஸ் நிறுவனத்திற்கு புதிதாக துணை இயக்குநர் பதவியை உருவாக்குவது, இயக்குநர் இல்லாத சமயங்களில் அவரது பொறுப்புகளை வகிப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநருக்கு அதிகாரம் வழங்குவது உள்பட ஒன்பது புதிய ஷரத்துகள் இந்த சட்டத் திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.


Pengarang :