ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பொங்கல் தினத்தன்று நீர் விநியோகத் தடையா? பழுதுபார்ப்பு பணியை ஒத்திவைக்க குணராஜ் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 7- புதிய குழாய்களைப் பொருத்துவது மற்றும் நீர் விநியோகத்தை தரம் உயர்த்துவது ஆகிய பணிகளுக்காக இம்மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத்தை நிறுத்தும் திட்டத்தை ஒத்தி வைக்கும்படி ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தை சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழர்களின் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்றைய தினத்தில் கொண்டாடப்படவிருப்தை கருத்தில் கொண்டு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பழுதுபார்ப்பு பணியை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஷா ஆலம், செக்சன் 15இல் மேற்கொள்ளப்படும் குழாய்களை தரம் உயர்த்தும் பணிக்காக இம்மாதம் கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 36 பகுதிகளில் வரும் 12ஆம் தேதி முதல் 48 மணி  நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்திருந்தது தொடர்பில் குணராஜ் இவ்வாறு கருத்துரைத்தார்.

சிலாங்கூர் மக்களின் நலனுக்காக நீர்க் குழாய்களை புதிதாக மாற்றுவது மற்றும் நீர் விநியோகத்தை தரம் உயர்த்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதை நான் வரவேற்கிறேன். எனினும், தமிழர்கள் வரும் 13ஆம் தேதி போகி பண்டிகையையும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையையும் கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு அந்த பழுது பார்ப்புப் பணிகளை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த நீர் விநியோகத் தடை காரணமாக இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் அதனைக் கொண்டாடுவதிலும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும். இவ்விஷயத்தில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :