ECONOMYHEALTHSELANGOR

கோவிட்-19:  ஒப்பந்த அடிப்படையில் 8,302 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

புத்ராஜெயா, மே 5– ஒப்பந்த அடிப்படையில் 8,302 சுகாதாரப் பணியாளர்களை  வேலைக்கு அமர்த்துவதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு நிதியமைச்சிடமிருந்து பெற்றுள்ளது.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மனித ஆற்றலை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

82 அறிவியல் அதிகாரிகள், 4,472 தாதியர், 2,249 உதவி மருத்துவ அதிகாரிகள், 666  மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பர்கள், 340 உதவி சுற்றுச்சூழல் அதிகாரிகள், 293 எக்ஸ்ரே  தொழில்நுட்பர்கள் ஆகியோரும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளில் ஆலோசக சேவை மற்றும் மன நலம் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் 200 ஆலோசகர்களின் சேவையை நீட்டிப்பதற்கும் நிதியமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, 3,622 பல் மருத்துவ சிகிச்சை அதிகாரிகள் மற்றும் மருந்தாளர்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கவும் நிதியமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த புதிய நியமனம் மற்றும் ஒப்பந்த நீட்டிப்பு நடவடிக்கை 28 கோடியே 96 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கியதாக இருக்கும் என்றார் அவர்.


Pengarang :