ECONOMYNATIONALPress Statements

என்.பி.ஆர்.ஏ. அமைப்பின் அனுமதி கிடைத்தால் சொந்தமாக தடுப்பூசி வாங்கத் தடையில்லை- பிரதமர் கூறுகிறார்.

கோலாலம்பூர், மே 24– சில தரப்பினர் சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்குவதில் அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

எனினும், என்.பி.ஆர்.ஏ. எனப்படும் தேசிய  மருந்தக ஒழுங்குமுறை நிறுவனத்திடமிருந்து அதற்கான அனுமதியை அவர்கள் பெறுவது அவசியம் என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, பெட்ரோனாஸ் அல்லது வேறு நிறுவனங்கள் சொந்தமாக தடுப்பூசியை வாங்க விரும்பினால் அதனை நாங்கள் தடுக்க இயலாது. எனினும், அந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு முறையான அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும். அந்த தடுப்பூசிகளை கடத்தல் மூலமாகவோ தவறான வழிகளில் பெறவோ கூடாது என்றார் அவர்.

பெர்னாமா டிவி மற்றும் ஆர்டிஎம்மில் நேற்று ஒளியேறிய கோவிட்-19 சவால்கள் தொடர்பில் பிரதமருடன் சந்திப்பு எனும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசித் திட்டத்தை மிகப்பெரிய அளவில் மேற்கொள்வதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் உள்பட தனியார் துறையினரும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான அனுமதி  வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பூசிகள் நாட்டிற்குள் வரத் தொடங்கியுள்ளதால் நோய்த் தடுப்பூ ஆற்றல் கொண்ட சமுதாயத்தை  உருவாக்கும் இலக்கை இவ்வாண்டு இறுதிக்குள்  அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :