ECONOMYHEALTHSELANGOR

அதிக மக்கள் தொகையை கொண்ட சிலாங்கூருக்கு குறைவான தடுப்பூசியா? சுல்தான் அதிர்ச்சி!

ஷா ஆலம், ஜூன் 8– சிலாங்கூர் மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குவதை தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு விரைவுபடுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு முன்பு கூறப்பட்டதைப் போல் 29 லட்சம் தடுப்பூசிகள் அல்லாமல் 615,210 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டதை கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு ஒப்புக் கொண்டது குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 65 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் விகிதாசாரம் நியாயமற்றதாக உள்ளதோடு சமநிலையற்றும் காணப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். ஆகவே, தடுப்பூசி வழங்குவதில் இம்மாநிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

நடப்புச் சூழலில் இதர திட்டங்களைக் காட்டிலும் மனித உயிர்களுக்கே தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

மாநிலத்தில்  குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணி விரிவான அளவில்  மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக நடமாடும் கிளினிக்குகள் மற்றும் டிரைவ் ட்ரூ எனப்படும் வாகனங்களில் இருந்தவாறு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட  வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :