ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பூச்சித் தொல்லையால் பாதிக்கப்பட்ட 600 ஹெக்டர் வயிலில் மருந்து தெளிக்கும் பணி முடிவடைந்தது

ஷா ஆலம், ஜூன் 23– பயிர்களை அழிக்கும் பூச்சிகளால் கடும் பாதிப்புக்குள்ளான  6,632.4  ஹெக்டர் நெல் வயலில் 600 ஹெக்டர் பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தும் தெளிக்கும் பணி முழுமையடைந்துள்ளது.

சபாப் பெர்ணம் மாவட்டத்திலுள்ள  அந்த 6,632.4 ஹெக்டர் நெல் விவசாய பகுதி தண்டுகளை ஊடுரும் மற்றும் இலைகளைச் சுருங்கச் செய்யும் ஒரு வகை புழுக்களின்  தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

நோய்க் கட்டுப்பாட்டு நிபுணர்கள் பரிந்துரைத்த பூச்சிக் கொல்லி மருந்தை வயலில் தெளிக்கும் பணி இரு வாரங்களுக்கு முன் தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம்  கூறினார்.

அந்த ஒருங்கிணைந்த பணிகளைப் பார்வையிடுவதற்காக நான் அப்பகுதிக்கு நேரில் வருகை புரிந்தேன். பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி சீராக மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

பூச்சிகளின் தாக்குதலால் பெரும் இழப்பை எதிர்நோக்கியிருக்கும் விவசாயிகளுக்கு நெல் பயிர் பேரிடர் நிதியிலிருந்து உதவி வழங்கும்படி விவசாய மற்றும் விவசாய அடிப்படை தொழில்துறை அமைச்சை தாம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நெல் வயல்களை பூச்சித் தொல்லையிலிருந்து காப்பாற்றுவதற்காக 10 லட்சத்து 35 வெள்ளி நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு இம்மாதம் 1 ஆம் தேதி அங்கீகரித்தது.

 


Pengarang :