ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசியின் விற்பனை வழி சிலாங்கூர் லாபம் ஈட்டுகிறதா? மந்திரி புசார் மறுப்பு

ஷா ஆலம், ஜூலை 1– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தொழில்துறையினருக்கு தடுப்பூசிகளை விற்பதன் மூலம் மாநில அரசு லாபம் சம்பாதிக்கிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

தொழில்துறையினருக்கு விற்கப்படும் தடுப்பூசியின் வழி கிடைக்கும் தொகை மாநில மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு உண்டாகும் செலவை ஈடுகட்ட உதவுகிறது என்று அவர் சொன்னார்.

“தடுப்பூசி என்றால் தடுப்பூசி அடங்கிய புட்டிகளையும் அது வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளையும் மட்டும் பார்க்கலாகாது. மாறாக, தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 5,000 பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி மையங்களை செயல்படுத்துவதற்கு ஆகும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்“ என்றார் அவர்.

“நிர்வாக செலவினங்களுக்காக கணிசமானத் தொகையை நாங்கள் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளதால் தடுப்பூசி வழி லாபம் ஈட்டுகிறோம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை“ என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரி எனப்படும் தொழில்துறையினருக்கான தடுப்பூசித் திட்டத்தின் வழி வெளிநாட்டினர் உள்பட 20 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான நோய்த் தொற்று மையங்கள் வேலையிடங்களை உட்படுத்தியுள்ளதால் அனைத்து மக்களையும் காப்பாற்றும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :