ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

உமிழ்நீர் வழி நோய் தொற்றைக் கண்டறியும் சாதனங்கள் 90% பலன் தருகின்றன

கோலாலம்பூர், ஜூலை 7– உமிழ்நீர் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றை கண்டறியும் இரு சுய பரிசோதனை கருவிகள் 90 விழுக்காடு உணர் திறனை வெளிப்படுத்தியுள்ளது ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இச்சாதனங்கள் மீதான ஐ.எம்.ஆர்.இன்  ஆய்வுகள் முற்றுப் பெற்ற வேளையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த சுய பரிசோதனைக் கருவியை பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டியை தயாரிக்கும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

உமிழ்நீர் மூலம் சுய பரிசோதனை செய்வது தொடர்பான ஐ.எம்.ஆர்.இன் இரு ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளன. அவை இரண்டுமே  90 விழுக்காட்டு உணர் திறனைக் கொண்டுள்ளன. இதன் தொடர்பான வழிகாட்டி அடுத்த வாரம் தயாராகி விடும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உமிழ்நீர் வழி நோய்த் தொற்றைக் கண்டறியும் சாதனங்களை மருந்தகங்களில் விற்பதற்கு இரு நிறுவனங்கள  அனுமதி கோரியுள்ளதாக  நோர் ஹிஷாம் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.

இந்த கருவிகளை பயன்படுத்துவதன் வழி கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான தொடக்க அறிகுறியைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இராது என்றும்  அவர் குறிப்பிட்டிருந்தார்.

 


Pengarang :