ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட் -19 நோயில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் பட்டியலை தயார் செய்ய கட்டளை

நாட்டில் கோவிட் -19 நோயில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் பட்டியலை தொகுக்க சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது, அதனை செய்வோம் என்றார் அவர்.

“இதற்குப் பின், இதுபோன்ற அதிகமான இறப்புகள் ஏற்பட்டால் அதனை கவனிக்க வேண்டும். அனைவருக்கும் என்ன நடக்கிறது. என்பது குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது, ”என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கோவிட் -19 க்கு பெற்றோரை இழந்த எட்டு உடன் பிறப்புகளை சந்தித்தப் பின்னர் அவர் அதனை கூறினார். சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோரெய்னி அகமது ஆகியோரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்களுக்குள் பெற்றோர்கள் இருவரையும் கோரோனா வைரசுக்கு பலிகொடுத்துவிட்ட எட்டு குழந்தைகளின் நிலை சமூக ஊடகங்களில் வைரலாகி பரவலாக மக்களின் அனுதாபத்தைப் பெற்றது.

ஒரு குடும்பத் தலைவரான பென்யாஜீத் பெர்னி ஜூலை 16 ம் தேதி இறந்தார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி நோரெய்னி இப்ராஹிம் இறந்தார்.

சிலாங்கூர் ஷாக்காட் வாரியம் மற்றும் சமூக நலத்துறை (ஜே.கே.எம்) உள்ளிட்ட பல இயக்கங்கள் எட்டு உடன் பிறப்புகளுக்கும் உதவி வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி கூறினார்.

வீட்டு வாடகையான ரிங் 650 சிலாங்கூர் ஷாக்காட் வாரியத்தால் முழுமையாக வழங்கப்படும், எட்டு உடன்பிறப்புகளுக்கும் ஜே.கே.எம் உணவு உதவிக்கு ஒரு மாதத்திற்கான RM950 வழங்கும், ”என்று அவர் கூறினார், மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து கோவிட் -19  மரண நிர்வாகத்திற்கான RM5,000 சிறப்பு உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் எட்டு பேரையும் போஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் தத்தெடுப்பதிலிருந்து, தொழிற்சாலையில் பணிபுரியும் 18 வயது இரண்டாவது பிள்ளைக்கு போஸ்டெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவது உட்பட பல உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில், குடும்பத்தின் மூத்த மகளான நசுரா நபிலா பென்யாஜீத் 19, தங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

அந்த எட்டு உடன் பிறப்புகளுக்கு ”ஸ்கிம் சிம்பனான் பெண்டிடிகன் நேஷனல்” (எஸ்.எஸ்.பி.என்-ஐ) சேமிப்பு வடிவத்தில் உயர்கல்வி அமைச்சகம் தலா RM500 வழங்கியுள்ளது.

இந்த உதவி தனது இளைய உடன்பிறப்புகள் தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

“ஆரம்பத்தில் நான் சோகமாக இருந்தேன் (பெற்றோரின் மரணம் குறித்து) ஆனால் என் இளைய உடன்பிறப்புகளும் அழுவதை நான் கண்டபோது, நான் அழுவதை நிறுத்தினேன், ஏனென்றால் அவர்களுக்காக நான் பலமாக இருக்க வேண்டும்.

“… உங்கள் அன்புக்குரியவர்களை இழப்பது இயல்பு. ஆனால் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அளவிற்கு நாம் சோகத்தில் மூழ்கிவிடக் கூடாது. வாழ்க்கையைத் தொடர நாம் வலுவாக இருக்க வேண்டும், “என்று அவர் கூறினார், குடும்பத்தை கவனிக்கும்படி அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர் என்றார் அவர்.


Pengarang :