ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

702 மூத்த குடிமக்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள்- கோல குபு பாரு தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், செப் 8- மூத்த குடிமக்கள் பரிவு திட்டத்தின்  (எஸ்.எம்.யு.இ.) கீழ் ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகளை  வழங்குவதற்காக கோல குபு பாரு தொகுதி 70,200 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரை அமல் படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் வழி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உள்பட 702 பேர் தலா 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெறுவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கும் பணி இன்று தொடங்கி வரும் 10 ஆம் தேதி வரை தொகுதி சேவை மையத்தில் நடைபெறும். மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் பதிந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் தொகுதி சேவை மையத்திற்கு வந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் தரப்பினரின் சுமையைக் குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம். இந்த பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றும் அவர்  தெரிவித்தார்.

60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்தரக்கூடிய இந்த ஜோம் ஷாப்பிங் திட்டத்திற்காக மாநில அரசு 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 


Pengarang :