ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

செலங்கா இலக்கவியல் சான்றிதழை தற்காலிக உறுதி சான்றாக பயன்படுத்த அனுமதிக்க கோரிக்கை

ஷா ஆலம், செப் 8- கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் செலங்கா செயலியில் உள்ள இலக்கவியல்  தடுப்பூசி சான்றிதழை தற்காலிக உறுதிச் சான்றாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கும்படி கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தை (சி.ஐ.டி.எஃப்.) சிலாங்கூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றப் பின்னரும் மைசெஜாத்ரா செயலியில் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழ் தோன்றவில்லை என்று சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெற்ற பலர் புகார் கூறி வருவதன் அடிப்படையில் இந்த கோரிக்கை முன் வைக்கப்படுவதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்ற 159,919 பேரின் பெயர்களை செலங்கா மைசெஜாத்ராவுக்கு அனுப்பிவிட்ட போதிலும் 3,632 பேர் இன்னும் இலக்கவியல் சான்றிதழைப் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

இலக்கவியல் சான்றிதழைப் பெறாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது கவலையைத் தருகிறது. செல்வேக்ஸ் பங்கேற்பாளர்களின் தரவுகளை மைசெஜாத்ரா செயலியில் பதிவிடுவதில் நுட்ப பிரச்னைகள் நிலவுவதாக மிமோஸ் பெர்ஹாட் கூறுகிறது. 

இப்பிரச்னையைக் களைய மிமோஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை அந்நிறுவனத்தால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இவ்விவகாரத்தை தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வார் என்றும் சித்தி மரியா தெரிவித்தார்


Pengarang :