ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 க்கு பிந்தைய கல்வித் திட்டத்தை வரைய சிறப்பு நடவடிக்கை மன்றம் தேவை

ஷா ஆலம், செப்  20- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய கல்வித் திட்டத்தை வரைவதற்காக சிறப்பு நடவடிக்கை மன்றத்தை உருவாக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த மன்றத்தில்  கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இடம் பெற வேண்டும் என்று சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலேக் கூறினார்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக  கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்வித் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் பரந்த தரவு முறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே சமயம், உயர் கல்வித் துறையை மீட்சியுறச் செய்வதற்கு ஏதுவாக அதன் நிர்வாகம் அரசியல் தலையீடின்றி முழுமையாக கல்விமான்கள்  மற்றும் கல்வி நிபுணர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

1996 ஆம் ஆண்டு தேசிய உயர் கல்வி மன்றச் சட்டத்திற்கேற்ப தேசிய உயர் கல்வி மன்றத்தின் வாயிலாக இதனை மேற்கொள்ளலாம். இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும் ஆட்சி மாற்றம் காரணமாக அதன் அமலாக்கம் முடக்கம் கண்டது என்று மக்களைவையில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

மலாய் மொழியை மேன்மையுறச் செய்வதற்கான முயற்சிகள் பெரிக்கத்தான் கூட்டணியின் கடந்த 18 மாத ஆட்சியிலும் தற்போதைய டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான ஆட்சியிலும் மங்கிவிட்டதாகவும் டாக்டர் மஸ்லி குற்றஞ்சாட்டினார்.

 


Pengarang :