ECONOMYHEALTHMEDIA STATEMENT

பண்டார் உத்தாமா தொகுதியில் 7,000 பேர் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, செப் 25- சிலாங்கூர் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

தொகுதி சேவை மையம் மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொண்டவர்களும் இதில் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முறையும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வோம். மற்ற விண்ணப்பங்கள் இதர செல்வேக்ஸ் திட்டங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவுடன் இணைந்து நடமாடும் தடுப்பூசி இயக்கத்தையும் மேற்கொண்டோம். ஒட்டு மொத்தமாக 6,000 முதல் 7,000 பேர் வரை இந்த தடுப்பூசி இயக்கங்களின் வாயிலாக பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

இன்று கம்போங் செம்பாக்காவில் நடைபெற்ற பண்டார் உத்தாமா தொகுதி நிலையிலான நடமாடும் தடுப்பூசி இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடையாளப் பத்திரங்கள் இல்லாத அந்நிய நாட்டினரை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த இயக்கத்தில் 350 பேருக்கான தடுப்பூசிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :