ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் உதவித் திட்டங்கள் அனைத்து இனங்களுக்கும் உரியவை- மந்திரி புசார்

கிள்ளான், அக் 26- சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து உதவித் திட்டங்களும் எல்லா இனங்களுக்கும் சமமானவை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வரையப்பட்டவை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல், எந்த முடிவும் சருமத்தின் நிறம், பிரிவு மற்றும் இன அடிப்படையில் எடுக்கப்படக் கூடாது என்ற கொள்கையை மாநில அரசு முன்வைத்து ஆட்சி புரிந்து வருவதாக அவர் சொன்னார்.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் அதே வேளையில் மேம்பாட்டை சரி சமமாக அனுபவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.

சிலாங்கூர் கெஅடிலான் ஏற்பாட்டில் நேற்று செந்தோசா தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் தீபாவளி சுற்றுப் பயணம் நிகழ்வை தொடக்கி  வைத்து உரையாற்றுகையில் மாநில கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களில் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம், கிஸ் எனப்படும் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம், பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் ஆகியவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இனம் மற்றும் தோலின் நிறத்தை வேற்றுமைக்கான அளவீடாக நாங்கள் ஒரு போதும் கருதியதில்லை. தேவையின் அடிப்படையில் சீன, தமிழ் மற்றும் சமயப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என்றார் அவர்.

அதே சமயம், பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களை நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு செய்வதோடு ஆலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்க லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து மற்றும் தோ சமய சிறப்பு செயல்குழுவையும் அமைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.


Pengarang :