ECONOMYMEDIA STATEMENTPBT

கைவிடப்பட்ட வாகனங்களை மறுசுழற்சி செய்யும் முன்னோடித் திட்டம்- எம்.பி.கே.ஜே. அமல்

ஷா ஆலம், நவ 23- கைவிடப்பட்ட வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு நட்புறவான முறையில் மறுசுழற்சி செய்யும் முன்னோடித் திட்டத்தை அமல் செய்யும் முதல் ஊராட்சி மன்றமாக காஜாங் நகராண்மைக் கழகம் விளங்குகிறது.

இம்மாவட்டத்தில் அதிகரித்து வரும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக இ.எல்.வி. எனப்படும் வாகனங்களை அழிக்கும் முறையை தாங்கள் வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி பயன்படுத்தவுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

இத்திட்டத்திற்காக கார் மெடிக் சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன் நாங்கள் ஒத்துழைப்பு நல்கி வருகிறோம். பயன்படுத்தப்படாத கார்கள் பண்டார் பாரு பாங்கியில் உள்ள வாகன சேகரிப்பு மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் அந்நிறுவனத்தின் பழுதுபார்ப்பு பட்டறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

பின்னர் அவ்வாகனங்களின் பாகங்கள் யாவும் சுற்றுச்சூழல் துறையின் தர நிர்ணயித்திற்கேற்ப முறையாக பிரிக்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத பாகங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக் காக குவாலிட் ஆலாம் வசம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எச்சரிக்கை அறிக்கை ஒட்டப்பட்ட சுமார் 5,000 வாகனங்கள் இழுவை வாகனங்களைக் கொண்டு அகற்றப்படும் என்றும் அவர் சொன்னார்.

காஜாங் நகராண்மைக் கழகத்திடம் மூன்று இழுவை வாகனங்கள் உள்ளதாக கூறிய அவர், காஜாங் வட்டாரம் பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளதால் மாதம் ஒன்றுக்கு 40 முதல் 50 வாகனங்கள் வரை மட்டுமே அகற்ற முடியும் என்றார்.

அதே சமயம் மாதம் ஒன்றுக்கு 150 வாகனங்களை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :