ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அக்டோபர் இறுதி வரை 97.5 விழுக்காட்டு ஆசிரியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 24- கடந்த அக்டோபர் மாதம 31 ஆம் தேதி வரை 97.5 விழுக்காட்டு ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் 99.04 விழுக்காட்டு ஆசிரியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறினார்.

பொதுச் சேவைத் துறை வெளியிட்ட உத்தரவின் படி தடுப்பூசி பெற மறுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசி பெற மறுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து சரிக்கேய் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் வோங் லிங் பியு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

தடுப்பூசி பெற மறுக்கும் ஆசிரியர்களுக்கு கழிப்பறை அல்லது ஒதுக்குப்புறமான இடங்கள் ஒதுக்கப்படுவதாக வெளிவந்த காணொளி குறித்து சிம்பாங்  ரெங்கம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் எழுப்பிய துணைக் கேள்விக்கு அச்சம்பவம் தொடர்பான தகவல்களைக் கொண்டிருப்பவர்கள் மேல் கட்ட விசாரணைக்காக அதனை கல்வியமைச்சிடம் ஒப்படைக்கலாம் என்று டாக்டர் மா சொன்னார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அனைவரின் நலனிலும் கல்வியமைச்சு  எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :