Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari (kiri) menyantuni sebahagian daripada peneroka Tanjung Pasir Ladang Tennamaram, Bestari Jaya selepas sidang media setelah mencapai kata sepakat dengan Kerajaan Negeri Selangor di Foyer SUK pada 30 November 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

40 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு வெற்றி- தென்னமரத் தோட்ட நில குடியேற்றவாசிகள் மகிழ்ச்சி

ஷா ஆலம், டிச 1- கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, தென்னமரத் தோட்ட நில குத்தகை தொடர்பில் கடந்த  40 ஆண்டுகாலமாக  400 குடியேற்றவாசிகள் நடத்தி வந்த போராட்டம் மாநில அரசின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக நில குடியேற்றவாசிகளின் பிரதிநிதியான வி. ஜெயக்குமார் (வயது 50) கூறினார்.

இந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முழு ஈடுபாடு காட்டிய சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சு வார்த்தையின் பலனாக இவ்விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தனி கவனம் செலுத்திய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு நில குடியேற்றவாசிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

இந்த நிலத்திட்டத்தில் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் பங்கேற்பும் உள்ளதால் குடியேற்றவாசிகளின் நலன் காக்கப்படும் என்பதோடு அவர்கள் மீது உரிய கவனமும் செலுத்தப்படும் என நம்புகிறோம் என்றார் அவர்.

தென்னமரம் தோட்ட நில விவகாரம் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் நில குடியற்றவாசிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்த நில குத்தகை விவகாரம் தொடர்பான பல்வேறு அம்சங்களில்  பி.கே.பி.எஸ். நிர்வாகத்தினருடன் கூட்டாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜெயகுமார் கூறினார். இதன் தொடர்பான இதர விஷயங்கள் இதர நில குடியேற்றவாசிகளுடன் கட்டங் கட்டமாக ஆராயப்படும் என  அவர் மேலும் சொன்னார்.

தென்னமரத் தோட்டப் பகுதியில் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 96.4 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளதாக மந்திரி புசார் நேற்று கூறினார்.

சரிகாட் பாரிசான் சூரியா சென்.பெர்ஹாட் மற்றும் டிரிலியன் புரோஜெக்ட் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுக்கு  வேறு இடத்தில் விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்புக்காக மாற்று நிலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலத்தை  சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பி.கே.பி.எஸ்.) 21 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் என்றும் இந்நிலத்திற்கு விண்ணப்பம் செய்துள்ள சுமார் 400 பேரை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையில் அது ஈடுட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :