ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 25,657 குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி உதவி  நிதி வழங்கப்பட்டது

 ஷா ஆலம், ஜன 10- பந்துவான் பங்கிட் சிலாங்கூர் எனப்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 25,657 பேருக்கு தலா 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மொத்தம் 2 கோடியே 57 லட்சத்து 67 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிப்பாங், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் கிள்ளானைச் சேர்ந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விளக்கப் படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 7,082 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்ற வேளையில் உலு லங்காட்டில் 6,300 பேருக்கும் கிள்ளானில் 5,739 பேருக்கும் உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும் சிப்பாங்கில் 2,326 பேர் கோல லங்காட்டில் 1,890 பேர், கோல சிலாங்கூரில் 1,548 பேர் கோம்பாக்கில் 645 பேர், உலு சிலாங்கூரில் 92 பேர் சபாக் பெர்ணமில் 35 பேர் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி  நிதியில் சிலாங்கூர் பங்கிட் திட்டம் தொடங்கப்படுவதாக மந்திரி புசார் கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :