ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தைப்பூசம்- பத்துமலை வளாகத்தில் வர்த்தகத்திற்கு அனுமதியில்லை

ஷா ஆலம், ஜன 15- இவ்வாண்டு தைப்பூசத்தின் போது பத்துமலை வளாகத்தில் வர்த்தகம் செய்வதற்கான பெர்மிட்டுகளை செலாயாங் நகராண்மைக் கழகம் வெளியிடவில்லை.

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் எந்த விதமான வர்த்தக நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று நகராண்மைக் கழகத்தின் வரத்தகப் பிரிவு இயக்குநர் முகமது ஜின் மசூட் கூறினார்.

தைப்பூசத்தை முன்னிட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தைப்பூசத்தின் போது அமலாக்கப் பிரிவினர் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்வர் எனக் கூறிய அவர், உத்தரவை மீறும் வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தைப்பூசத்தின் போது பத்துமலையில் தூய்மையை உறுதி செய்ய 26 குப்பைத் தோம்புகள் வைக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தைப்பூச  விழாவின் போது அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்கும் அதேவேளையில் தூய்மையையும் பேணும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Pengarang :