ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஏழைகளுக்கு உதவும் திட்டம்- விற்பனை வழி வெ. 300,000 திரட்ட மைடின் திட்டம்

சுபாங் ஜெயா, மார்ச் 25- 2022 ஆம் ஆண்டு ஷவால் மைடின் பரிவு இயக்கத்தின் வழி 300,000 வெள்ளி வரை திரட்ட நாட்டின் மிகப்பெரிய ஹலால் விற்பனை பேரங்காடியான மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் திட்டமிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த நிதி திரட்டும் இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் அமீர் அலி மைடின் கூறினார்.

மார்ச் மாதம் முதல்  தேதி தொடங்கி மே 22 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தில் மைடின் நிறுவனத்தின் 51 விவேக விநியோகிப்பாளர்கள் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மைடின்  கிளைகளில்  வாடிக்கையாளர்கள் கொள்முதல் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களுக்கான விலையில் 5 காசு முதல் 1.00 வெள்ளி வரையிலானத் தொகை மைடின் பரிவு திட்டத்தில் சேர்க்கப்பட்டு வறியவர்களுக்கு பெருநாள் உடைகள் அல்லது சமையல் பொருள்கள் ரூபத்தில் வழங்கப்படும் என்றார் அவர்.

சுபாங் ஜெயா யுஎஸ்ஜே மைடின் பேரங்காடியில் நேற்று நடைபெற்ற ஷவா சென்யுமான் இயக்கம் மற்றும் ஷவால் மைடின் பரிவு இயக்கத்தின் தொடக்க நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வுகளை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மைடின் பேரங்காடியில் பொருள்களை வாங்குவதன் மூலம் ஏழைகளுக்கு உதவும் திட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கும்படி பொதுமக்களை அமீர் அலி கேட்டுக் கொண்டார்.


Pengarang :