ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு அனைத்து ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

ஷா ஆலம், ஏப் 5- வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட மசோதாவுக்கு (கட்சித் தாவல் தடைச் சட்டம்) பக்கத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தருவர்.

அந்த சட்ட மசோதா தாக்கல் தொடர்பில் விளக்கம் பெறுவது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி  யாக்கோப்புடன் அக்கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் சந்திப்பு நடத்தியப் பின்னர் ஹராப்பான் தலைவர் மன்றம் இந்த உறுதி மொழியை வழங்கியது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிக்கை அனுப்பப் பட்டதைப் போல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் வாக்குறுதியளித்துள்ளதாக அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியு ஃபூக் அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியுஸ் தங்காவ் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சித் தாவல் தடைச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி வான் ஜாபர் கடந்த மார்ச் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :