ANTARABANGSAECONOMYHEALTH

கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களுக்கு காலில் இரத்தக் கட்டி ஏற்படும் அபாயம்- ஆய்வில் தகவல்

வாஷிங்டன், ஏப் 7– கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட மூன்று மாதங்களுக்கு பிறகு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கால்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயத்தை சம்பந்தப்பட்ட நோயாளிகள் கொண்டுள்ளதாக ஆய்வொன்று கூறுகிறது.

மேலும், நோய்த் தொற்று கண்ட ஆறு மாதம் வரையிலான காலத்தில் நுரையீரலில் இரத்தக் கட்டி மற்றும் நுரையீரல் தொற்று உண்டாகும் ஆபத்தும் உள்ளது என பி.எம்.ஜே. ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி யுனைடெட் இண்டர்நேஷனல் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் கால் நரம்புகளில் இரத்தக் கட்டி ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகம் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதயத்திற்கு செல்லும் நாளங்களில் இரத்த உறைவு அல்லது இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் ஏற்படுத்தும் என்று இணை ஆய்வாளரான மேரி போர்ஸ் உமேயா தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக, மருத்துவமனையில் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :