ECONOMYSELANGOR

சிலாங்கூரில் சோளப் பயிரிட்டு திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் தொடங்கும் 

ஷா ஆலம், ஏப் 25- கால் நடை தீவன விலை உயர்வை சமாளிக்கும் முயற்சியாக சிலாங்கூர் அரசு மக்காச் சோளத்தை பயிரிடும் திட்டத்தை தொடங்கவுள்ளது. இந்த திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சோள பயிரிட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று  நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைப் பொருள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் நெகிரி செம்பிலானில் 400 ஏக்கரிலும் சிலாங்கூரில் 300 ஏக்கரிலும் மக்காச் சோளம் பயிரிடப்படும் என்று அவர் சொன்னார்.

கோழி தீவனத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறிய அவர், தற்போது அந்த தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு 700 கோடி வெள்ளி வரை தேவைப்படுவதாகச் சொன்னார்.

இந்த சோளப் பயிரிட்டுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவதன் மூலம் கோழி விலையேற்றம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் கோழித் தீவின பயன்பாட்டிற்காக சோளத்தை உற்பத்தி செய்யும் முன்னோடி மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள செக்சன் 13 பாசார் தானியில் நடைபெற்ற மாபெரும் மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, கோழி விலையேற்றப் பிரச்னைக்கு நீடித்த தீர்வு காணும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அரசு 30 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளதாகவும் இஷாம் கூறினார்.


Pengarang :