ECONOMYMEDIA STATEMENT

பிறப்பு பத்திரத்தில் தவறானத் தகவல்களை வழங்கினார்- குத்தகைத் தொழிலாளிக்கு வெ. 3,000 அபராதம்

ஈப்போ, மே 18- ஈராண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தையின் பிறப்பு பத்திரப் பதிவில் தவறான தகவல்களை இடம் பெற அனுமதித்த குற்றத்திற்காக குத்தகைத் தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 வெள்ளி அபராதம் விதித்தது.

முகமது ரிட்சுவான் சென் அப்துல்லா (வயது 49) என்ற அந்த நபர் தனக்கெதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நோர் அஸ்ரின் லியானா முகமது டாருள் இத்தீர்ப்பை வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் முகமது ரிட்சுவான் நான்கு மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில் கூறினார். எனினும், அவர் அபராதத் தொகையை செலுத்தினார்.

கடந்த 2020 செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் ஈப்போ யு.டி.சி. கிளையிலுள்ள தேசிய பதிவுத் துறை அலுவலகத்தில் பெண் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும் போது அதில் தவறான தகவல்கள் இடம் பெற அனுமதியளித்ததாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.

இந்தோனேசிய மாது ஒருவருக்கு பிறந்த குழந்தையை தனது குழந்தை என பதிவு செய்ய முயன்றதற்காக முகமது ரிட்சுவானுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு சார்பில் வழக்கை நடத்திய தேசிய பதிவுத் துறையின் புரோசிகியூஷன் அதிகாரி முகமது ஹிஷாம் சாருடின் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தனது கட்சிக்காரர் புரிந்த முதல் குற்றம் என்பதால் அவருக்கு குறைந்த பட்ச தண்டனையை வழங்குமாறு முகமது ரிட்சுவான் சார்பில் ஆஜரான தேசிய சட்ட உதவி வாரியத்தின் வழக்கறிஞர் ஜி குர்பஜான் சிங் கேட்டுக் கொண்டார்.


Pengarang :