ECONOMYHEALTHSELANGOR

மூன்று தொகுதிகளில் இன்று நாளையும் இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், ஆக 13– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் இன்றும் நாளையும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

கோத்தா டாமன்சாரா தொகுதி நிலையிலான மருத்துவ பரிசோதனை இயக்கம் செக்சன் யு6, டேவான் ரேஸேல் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் கோத்தா அங்கிரிக் தொகுதிக்கான பரிசோதனை இயக்கம் டேவான் ராஃப்லெஷியா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

ரவாங் தொகுதி நிலையிலான பரிசோதனை ரவாங், 17வது மைல், டேவான் தெராத்தாயில் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தங்களின் உடல் நிலை குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதையும் இத்தகைய பரிசோதனைகள் மூலம் நோய்க்கான அறிகுறியை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதையும் நோக்கமாக கொண்டு இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

எல்லாப் பொருள்களும் விலையேற்றம் கண்டு வருவதைப் போல் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. உடலாரோக்கியமே வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இனியும் தாமதம் வேண்டாம். மருத்துவ பரிசோதனைக்கு விரைந்து பதிந்து கொள்ளுங்கள் என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தை நடத்துவதற்காக மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல் பருமனானவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்ட இந்த மருத்துவ பரிசோதனையின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :