ECONOMYNATIONAL

நஜிப் சிறைச் சென்றது மக்களின் சக்தியைப் புலப்படுத்துகிறது- அன்வார் வர்ணனை

ஷா ஆலம், ஆக 24– முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மேல் முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததானது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் மக்களுக்கு உள்ள சக்தியை புலப்படுத்துவதாக உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைத் தேர்வு செய்யாது போயிருந்தால் நஜிப்பிற்கு எதிரான இந்த தண்டனை சாத்தியமாகியிருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நீதித் துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கும் நாட்டை ஊழல் நடவடிக்கைகளிலிருந்து சுத்தப்படுத்துவதற்கும் மக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில் முடிவெடுத்தார்கள். மக்களின் அந்த முடிவு நீதித்துறை நிபுணத்துவ அடிப்படையில் செயல்படுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று அவர் சொன்னார்.

மக்கள் சிறந்த முறையில் முடிவெடுக்கும் போதும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போதும் நாட்டின் அரசியல் சூழல் மாற்றம் காணும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளாக இருந்தது போல் அரசியல் அதிகாரத்திற்கேற்ப வளைந்து கொடுக்காமல் ஆதாரத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் தைரியத்தையும் உறுதியான நிலைப்பாட்டையும் நீதித் துறை கொண்டுள்ளது. இப்போதுதான் மனது நிம்மதியாக உள்ளது என்றார் அவர்.

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் வழக்கில் நஜிபிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய 12 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 21 கோடி வெள்ளி அபராத த்தை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிலை நிறுத்தியது.


Pengarang :