ECONOMYNATIONALSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனையில் புதிய பொருள்கள் அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா, செப் 4- இன்று இங்குள்ள கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற மக்கள் பரிவு மலிவு விற்பனையில் மேலும் சில புதிய பொருள்களை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எ.ஸ்.) அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற மஹா 2022 எனப்படும் அனைத்துலக விவசாய மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு இரு வாரங்களுக்கு முன்னர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மூன்று வித சுவை கொண்ட பிஸ்கட் இந்த மலிவு விற்பனையில் இடம் பெற்றுள்ளதாக அதன் விற்பனை உதவியாளர் கைரி இட்ரிஸ் கூறினார்.

சோளம், சீனி மற்றும் சிறப்பு கிரேக்கர் என மூன்று வித பிஸ்கட்டுகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். இவற்றில் சோள சுவை கொண்ட பிஸ்ட்டுகளே அதிகம் விற்பனையாகின்றன.

பிஸ்கட் தவிர்த்து அதிகம் விற்பனையாகும் பொருள்களில் ஐந்து கிலோ எடை கொண்ட அரிசி பொட்டலம், பி கிரேட் முட்டை, காய்கறிகளும் இடம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இடத்திலும் 30 கட்டுகள் வீதம் ஆறு விதமான காய்கறிகளை விற்பனைக்கு வைக்கிறோம். வியாபாரம் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அவை விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற சமூக மண்டபத்தில் நண்பகல்  12.00 மணி வரை நடைபெற்றது. இங்கு விற்கப்படும் அனைத்து பொருள்களும் சந்தையை விட விலை குறைவானதாக உள்ளன.

விலைவாசி உயர்வினால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


Pengarang :