ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை வழி 10,000 பேருக்கும் மேல் பயனடைந்தனர்

ஷா ஆலம், செப் 14- சிலாங்கூர் அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் மூலம் அவர்கள் 545,000 வெள்ளியை  மிச்சப்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

மாநிலத்திலுள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 54 விற்பனை திட்டங்கள் மூலம் 10 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள வர்த்தகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விற்பனையின் முதல் வாரத்தில் பொது மக்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவின் அடிப்படையில் மாநில மக்களுக்கான விற்பனையின் அளவும் மானியச் சலுகையும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மந்திரி புசார் அறிவித்தபடி இந்த திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பி.கே.பி.எஸ். தனது அனைத்து பணியாளர்கள் மற்றும் சாதனங்களையும் முழுமையாகப் பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திங்கள்கிழமை நீங்கலாக மற்ற தினங்களில் ஒன்பது லோரிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  சென்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த விற்பனையை மேற்கொள்ளும். இந்த திட்டம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கழகத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 100 பேரோடு தன்னார்வலர்களும் இதில் பங்கு கொண்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :