ECONOMYPBTSELANGOR

சுங்கை பீசி-உலு கிள்ளான் நெடுஞ்சாலையை தினசரி 80,000 வாகனங்கள் பயன்படுத்தும்

கோலாலம்பூர், செப் 15- சுங்கை பீசி-உலு கிள்ளான் அடுக்கு விரைவுச் சாலை (சுக்) போக்குவரத்துக்கு திறக்கப்படுவதன் மூலம் கோலாலம்பூரின் மேற்கு பகுதியில் நிலவும் வாகனப் போக்குவரத்துப் பிரச்னையைக் குறைக்க இயலும்.

இந்த நெடுஞ்சாலையை தினசரி 80,000 வாகனங்கள் வரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக புரோஜெக் லிந்தான்சான் கோத்தா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது அஸ்லான் அப்துல்லா கூறினார்.

ஸ்ரீ பெட்டாலிங்கையும் உலு கிள்ளானையும் இணைக்கும் இந்த 24.4 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை எம்.ஆர்.ஆர்.2 எனப்படும் மத்திய சுற்றுச் சாலை இரண்டு, ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் லோக் யூ ஆகிய சாலைகளில் 30 விழுக்காடு வாகன நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

விரைவான பயணத்திற்கு உதவக்கூடிய மாற்று வழியாக இந்த சுக் நெடுஞ்சாலை விளங்குகிறது. இது வாகனமோட்டிகளுக்கு பயனான மற்றும் சிக்கனமான மாற்று வழியாகவும் உள்ளது என்றார் அவர்.

செராஸ்-காஜாங் சாலை சந்திப்பிலிருந்து புக்கிட் அந்தாரா பங்சா வரைக்குமான 16.6 கிலோ மீட்டரை உள்ளடக்கிய இந்நெடுஞ்சாலையின் முதல் பகுதி கூடிய விரைவில் திறக்கப்படும் எனக் கூறிய அவர், எனினும், அச்சாலை திறக்கப்படும் தேதியை போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ பாடிலா யூசுப் இன்று அறிவிப்பார் என்றார்.


Pengarang :