ECONOMYNATIONAL

ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் கடந்தாண்டு 3.5 விழுக்காடு அதிகரிப்பு

புத்ரா ஜெயா, அக் 5- மலேசியாவில் கடந்தாண்டு ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 3.5 விழுக்காடு அதிகரித்து 3,037 வெள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் சராசரி வருமானம் 2,933 வெள்ளியாக இருந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டில் 94 லட்சமாக இருந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 97 லட்சமாக ஏற்றம் கண்டதோடு அவர்களின் சம்பளமும் 3.4 விழுக்காடு உயர்ந்ததாக மலேசிய புள்ளிவிபரத் துறை வெளியிட்ட 2021 ஆம் ஆண்டிற்கான மலேசிய சம்பளம் மற்றும் ஊதியம் மீதான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாடு மீண்டதன் விளைவாக கடந்த 2021 மத்தியிலிருந்து பொருளாதார மற்றும் சமூகவியல் நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றதால் மாதச் சம்பள விகிதாசாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மலேசிய புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

இந்த ஆய்வின் படி சராசரி ஊதியம் அல்லது மாதச் சம்பளம் கடந்த 2020 ஆம் ஆண்டு 2,062 வெள்ளியாக இருந்த நிலையில் கடந்தாண்டு அத்தொகை 2,250 வெள்ளியாக அதிகரிப்பைக் கண்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆண் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 2,315 வெள்ளியாகவும் பெண் தொழிலாளர்களின் சம்பளம் 2,145 வெள்ளியாகவும் இருந்தது. விகிதாசார அடிப்படையில் ஒப்பிடுகையில் இது முறையே 10.6 மற்றும் 6.2 விழுக்காடு உயர்வாகும்.

மலேசிய பொருளாதாரம் மீட்சியை நோக்கிப் பயணிப்பதை இந்த சராசரி சம்பள உயர்வு காட்டுவதாக முகமது உஸீர் தெரிவித்தார்.


Pengarang :