ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பேரிடர் முன்னெச்சரிக்கை, நிவாரண உதவிக்கு முன்னுரிமை அளிப்பீர்- மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 6- வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலை ஏற்பாடுகளில் வெள்ள முன்னெச்சரிக்கை முறையின் அமலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தியதாக சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

இங்குள்ள தேசிய வெள்ள கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையத்தில் வழங்கப்பட்ட விளக்கமளிப்பைக் கேட்டறிந்தப் பின்னர் பேரரசர் இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய விளக்கமளிப்பு நிகழ்வின் போது வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள், தரவுகள் மற்றும் தயார் நிலை குறித்து வடிகால் நீர்ப்பாசனத் துறையும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையும் விளக்கமளித்தன. இந்த விளக்கமளிப்பில் மாமன்னர் மனநிறைவு அடைந்தார் எனவும் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் குழப்பம் ஏற்படாதிருக்க நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கும் இதர துறைகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் பேரரசர் கேட்டுக் கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விளக்கமளிப்பு நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


Pengarang :