ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு ஏற்பாட்டில் இலவச சிகிச்சை

ஷா ஆலம் ஜன 2- மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு பிரத்தியேக நிதித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

சிலாங்கூர் மெண்டல் சேஹாட் (சேஹாட்) எனும் முன்னெடுப்பின் வழி அமல்படுத்தப்படும் இந்த உதவித் திட்டத்தின் கீழ் 700 முறை சிகிச்சை பெறுவதற்கான மானியத் தொகையாக 222,000 வெள்ளியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்று பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மன நல சிகிச்சைகளுக்கு பெரும் தொகை தேவைப்படும் என்பதால் இத்தகைய பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

இத்தகைய நோயாளிகளுக்கு தேவையான முதல் கட்ட சோதனை, மனநல நிபுணர்களின் ஆலோசக சேவை, மனநல சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு உண்டாகும் செலவை மாநில அரசு முதல் இரண்டு வாரங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.

மன நோய் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனையாக உள்ளதாக கூறிய அவர், இப்பிரச்சனைக்கு விரைவாக  தீர்வு காண்பது அவசியமாகும் என்றார்.

மன நலம் தொடர்பான மதிப்பீட்டு சோதனையை மேற்கொள்வதற்கு செலங்கா செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனநல சிகிச்சை தொடர்பான மேல் விபரங்களை www.drsitimariah.com/sehat எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் மன நலம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கத் தொடங்கியதை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த சேஹாட் திட்டத்தை கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :