ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை- கணபதிராவ்

ஷா ஆலம், ஜன 29- வெள்ளப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் உள்பட அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவது  இவ்வாண்டில் தாம் முன்னுரிமை அளிக்கவுள்ள திட்டங்களாகும்  என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி கணபதிராவ் தெரிவித்தார்.

இப்பகுதி மக்களுக்கு 2021 டிசம்பரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரிய வெள்ளம் போன்ற பேரிடர் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில்  இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து மேற்கொள்வதற்காக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை  உட்பட பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், இதனால் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்களை துரிதப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

மக்களுக்கு உணவுக் கூடைகளை வழங்குவதை விட வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த நடவடிக்கையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

குப்பைகளை அகற்றுவது, சாலை சீரமைப்பு, மைதானம் மற்றும் விளையாட்டு பூங்காக்கள் பராமரிப்பு  போன்ற விஷயங்களிலும் தமது தரப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றார் அவர்.

 கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம் சூழ்ந்த பல இடங்களைச் சீரமைக்கும் பணி  சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக  கணபதிராவ்  கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார்.

கம்போங் புக்கிட் லஞ்சோங், லஞ்சோங் ஜெயா, ஆலம் மெகா, கம்போங் பாரு ஹைக்கோம் மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளில்  மேற்கொள்ளப்டும் சீரமைப்புப்  பணி, கனமழையின் போது நீர் பெருக்கத்தைக் குறைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

சுமார் 2.8  கோடி வெள்ளி செலவில் வடிகால் மற்றும் கான்கிரீட் சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட சில திட்டங்களை  ஷா ஆலம்  மாநகர் மன்றம் முனைப்புடன் யேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Pengarang :