ALAM SEKITAR & CUACAECONOMY

பொது உபசரிப்பில் குவியும் திடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பான வழிகாட்டி- லுவாஸ் வெளியீடு

ஷா ஆலம், ஏப் 23- பெருநாள் காலத்தின் போது நீர்விநியோகத் தடை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கு லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டியைப் பின்பற்றுமாறு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை ஏற்பாடு செய்வோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெருநாள் பொது உபசரிப்பை நடத்துவோர் உணவுக் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த வாரியம் கூறியது.

நீர் மாசுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய குப்பைகளை உரிய தரப்பினர் முறையாக அழிப்பதற்கு இந்நடவடிக்கை துணை புரியும். உணவுக் கழிவுகளை ஆற்றில் வீசுவது முற்றாக தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதனால் நீர் மாசுபாடு ஏற்பட்டு நீர் விநியோகத் தடை ஏற்படுவதற்கான  ஆபத்து உண்டாகும் என அது குறிப்பிட்டது.

பயன்படுத்திய சமையல் எண்ணெயை கால்வாயில் நேரடியாக வீசாமல் அவற்றை மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பும்படி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அந்த வழிகாட்டியில் அந்த வாரியம் கேட்டுக் கொண்டது.

பெருநாள் காலத்தில் நீர் விநியோகத் தடையை சாதாரணமாக கருதாதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் நீர் விநியோகத் தடை ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் அது ஆலோசனை கூறியது.


Pengarang :