ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தடுப்புச் சுவர் சரிந்து பாதுகாவலர் மரணம்

கோலாலம்பூர், மே 4- தடுப்புச் சுவர் சரிந்து விழுந்த சம்பவத்தில் பாதுகாவலர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் இங்குள்ள ஜாலான் சைட் புத்ராவிலுள்ள விஸ்மா ஒய்.பி.ஆர். அருகே இன்று அதிகாலை நிகழ்ந்தது.

எழுபத்து மூன்று வயதுடைய அந்த பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவப்  பணியாளர்கள் உறுதிப் படுத்தியதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை ஆணையர் முகமது ரிட்சுவான் ரசாலி கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த பாதுகாவலர் பாதுகாவல் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்த தடுப்புச் சுவரிலிருந்து கற்கள் பாதுகாவல் சாவடிக்கு அருகே விழுந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல் தெரிவிக்க அந்த பாதுகாவலர் முனைந்துள்ளார். எனினும் அதற்குள் இந்த பேரிடர் நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று விடியற்காலை 12.53 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய அவர், 1.05 மணியளவில் தமது குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து விட்டனர் என்றார்.

ஹாங்துவா மற்றும் சீபூத்தே தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 41 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த பாதுகாவலர் உடல் அதிகாலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார் அவர்.


Pengarang :