ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர்களை எதிர் கொள்வதற்கான தயார் நிலையில் எம்.பி.எஸ்.ஜே. விரைவு பணிக்குழு

ஷா ஆலம், மே 5-நிச்சயமற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வதற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்ற விரைவு பணிக்குழுவின் 65 உறுப்பினர்கள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவு அல்லது மரங்கள் சாய்வது போன்ற சம்பவங்கள் நிகழும் போது அவர்கள் விரைந்து சென்று உதவிகள் வழங்குவர் என்று சுபாங் ஜெயா டத்தோ பண்டார் முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

எந்நேரமும் குறிப்பாக மழை காலங்களில் அவர்கள் முழு தயார் நிலையில் இருப்பர். விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் அவ்விடத்தை அடையும் முதல் தரப்பினராக இந்த விரைவுப் பணிக் குழுவினர் விளங்குவர் என்றார் அவர்.

சுபாங் ஜெயா வட்டாரத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள யுஎஸ்ஜே 8, கம்போங் தெங்கா மற்றும் ஐ.ஒ.ஐ. மால் பேரங்காடி அருகில் உள்ள பகுதி ஆகியவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகளில் சில மணி நேரத்திற்கு மழை பெய்தால் கூட வெள்ளம் ஏற்பட்டு விடுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இப்பகுதிகளை நாம் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்றார் அவர்.

கண்காணிப்பு பணிகள் தவிர்த்து, கால்வாய்களில் நீரோட்டம் தடைபடும் அளவுக்கு குப்பைகளால் அவை அடைபடாமல் இருப்பதை உறுதி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :